முருங்கப்பாக்கம் சந்திப்பு அருகே சரக்கு வாகனத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பிகளால் போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி : புதுச்சேரி-கடலூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மிலாடி நபி பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்கள் என்பதால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, புதுச்சேரி-கடலூர் சாலை முருங்கப்பாக்கம் சந்திப்பு அருகே நேற்று மாலை இரும்பு கம்பிகளை ஏற்றிக்ெகாண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்தது. இதில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பீரேக் பிடித்தபோது, வாகனத்தின் மீது கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் வாகனத்தின் முன் விழுந்தது.
இச்சம்பவத்தால் சரக்கு வாகனம் முன்புறம் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி கீழே விழுந்த இரும்பு கம்பிகளை வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் கடும் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.