பாரம்பரிய இனிப்பு கடையில் ஜிலேபி, லட்டு செய்து பார்த்த ராகுல் காந்தி: தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்
புதுடெல்லி: தீபாவளியையொட்டி, பழைய டெல்லியில் உள்ள நூற்றாண்டு பழமையான கந்தேவாலா இனிப்பு கடைக்கு சென்ற வீடியோவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் நேற்று முன்தினம் பகிர்ந்தார். அதில், ‘‘தீபாவளியின் உண்மையான இனிப்பு உணவில் மட்டுமல்ல, உறவுகள் மற்றும் சமூகத்திலும் உள்ளது. பழைய டெல்லியில் உள்ள பிரபலமான வரலாற்று சிறப்புமிக்க கந்தேவாலா இனிப்பு கடையில் ஜிலேபி, லட்டு செய்து முயற்சித்தேன். நூற்றாண்டுகளை கடந்தும் இக்கடையின் தூய்மை, பாரம்பரியம், மனதை தொடும் சுவை மாறாமல் அப்படியே உள்ளது. நீங்களும் உங்கள் தீபாவளியை எவ்வாறு கொண்டாடினீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்’’ என ராகுல் கூறி உள்ளார்.
மற்றொரு பதிவில், ‘‘இந்தியாவின் மகிழ்ச்சி தீபத்தால் ஒளிரட்டும். ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பு, அன்பின் ஒளி பரவட்டும்’’ என தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இனிப்பு கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் ராகுல் உரையாடினார். இது குறித்து வீடியோ வெளியிட்ட கடை உரிமையாளர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என ராகுல் காந்தியின் அத்தனை குடும்பத்தினருக்கும் இனிப்புகளை வழங்கியிருப்பதாகவும், உங்கள் (ராகுலின்) திருமணத்திற்கான இனிப்பு ஆர்டருக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறி உள்ளார். அதற்கு ராகுல் காந்தி புன்னகைத்தார்.