வர்த்தக போருக்கு மத்தியில் டிரம்ப்-ஜின்பிங் இன்று சந்திப்பு: தென் கொரியாவில் நடக்கிறது
சியோல்: வர்த்தக போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று சந்தித்து பேச உள்ளனர். தென் கொரியாவில் நடக்கும் இந்த சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உலகளாவிய வரி விதிப்புகளுக்கு மத்தியில் சீனா உடனான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்தது. இதற்கு பதிலடியாக நவம்பர் முதல் அனைத்து சீனப் பொருட்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது.
இந்த சூழலில் தென் கொரியாவின் புசானில் இன்று நடக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே அதிபர்கள் டிரம்ப், ஜின்பிங் சந்தித்து பேச உள்ளனர். டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பை இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன. சாதகமான முடிவுகளை பெறுவதற்கும், புதிய வழிகாட்டுதலை வழங்குவதற்கும் சீனா-அமெரிக்க உறவுகளின் நிலையான வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்க தரப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோ ஜியாகுன் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், சீனாவின் முன்னணி சமூக ஊடக செயலியான டிக்டாக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதும், மொபைல் போன்கள் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான அரிய தாதுக்கள் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதும் முக்கிய அம்சமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அது அமெரிக்கா, சீனாவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
தென் கொரியாவுக்கு டிரம்ப் சென்றுள்ள நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக கூறி உள்ளது. வடகொரியாவின் கடல் பகுதியில் ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்குவதற்கு முன்பாக 2 மணி நேரம் வானில் பறந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக தென் கொரியாவுக்கு வரும் வழியில் விமானத்தில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தார்.