தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.9 லட்சம் கோடி வர்த்தக இலக்கு இந்தியாவுக்கு தடையின்றி எரிபொருள் சப்ளை: பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா இடையே ரூ.9 லட்சம் கோடிக்கு வர்த்தக இலக்கை எட்டுவது என்றும், தடையில்லாமல் எரிபொருள் சப்ளை செய்யவும் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் உறுதி செய்தனர். இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான 23வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி அவரை வரவேற்று, இரவு விருந்து அளித்தார். அதை தொடர்ந்து நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

Advertisement

தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் மலர் வளையம் வைத்து புடின் மரியாதை செலுத்தினார். பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனித்தனியாகவும், பின்னர் அதிகாரிகளுடனும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் முடிவில் இரு தலைவர்களும் கூட்டாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இந்த உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: எனது நண்பர் அதிபர் புடின் மற்றும் இரு நாடுகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் புடின் எங்கள் கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டார். கடந்த 80 தசாப்தங்களில் உலகம் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. இருப்பினும், இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பு ஒரு துருவ நட்சத்திரம் போல உள்ளது. இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்று, இந்த உறவை வலுப்படுத்த உதவும் அனைத்து காரணிகள் குறித்தும் நாங்கள் விவாதித்துள்ளோம்.

எரிசக்தி, பாதுகாப்பு எங்கள் கூட்டாண்மையின் வலுவான தூணாக இருந்து வருகிறது. மேலும் இந்த வெற்றி-வெற்றி ஒத்துழைப்பை நாங்கள் தொடருவோம். சிவில் அணுசக்தியில் எங்கள் ஒத்துழைப்பு பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது சுத்தமான எரிசக்திக்கு பங்களித்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பராமரிக்க முக்கியமான கனிமங்களில் எங்கள் ஒத்துழைப்பு அவசியம். இந்த ஆண்டு அக்டோபரில், கல்மிகியாவில் நடந்த சர்வதேச பவுத்த மன்றத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.

இதுபோன்ற இருநாட்டு உறவுகள் தொடர ரஷ்ய நாட்டு மக்களுக்கு 30 நாள் இலவச இ- சுற்றுலா விசா மற்றும் 30 நாள் குழு சுற்றுலா விசாவை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 2030 வரை இருநாடுகள் இடையே பொருளாதார ஒப்பந்தம், ஒத்துழைப்பு தொடரும். இந்தியா-ரஷ்யா இடையேயான ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான இருதரப்பு வர்த்தக இலக்கு 2030 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அடையப்படும். ரஷ்யாவின் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், இந்தியாவுடன் கூட்டு சேருங்கள் என்று நான் அழைக்கிறேன்.

கடந்த ஆண்டு, அதிபர் புடினும் நானும் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தில் ரூ.9 லட்சம் கோடியை எட்டும் இலக்கை நிர்ணயித்தோம். இருப்பினும், அதிபர் புடினுடன் மேலும் கலந்துரையாடிய பிறகும், எங்கள் கூட்டாண்மையில் உள்ள மிகப்பெரிய ஆற்றலைக் கருத்தில் கொண்ட பிறகும், இந்த இலக்கை முன்கூட்டியே அடைவோம் என்று நான் நம்புகிறேன். இந்த இலக்கை நோக்கி நாங்கள் விரைவான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். மலிவு, திறமையான மின்சார வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி இயக்க தீர்வுகளில் இந்தியா உலகளாவிய அளவில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ரஷ்யா மேம்பட்ட பொருட்களின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. மின்சார வாகன உற்பத்தி, தொழில்நுட்பங்களில் கூட்டு சேர்வதன் மூலம், இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உலகளாவிய வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும். இவ்வாறு பேசினார்.

அதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது: பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரின் அன்பான மற்றும் விருந்தோம்பல் வரவேற்புக்கு நன்றி. வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்திற்கு தடையின்றி எரிபொருள் ஏற்றுமதியைத் தொடர நாங்கள் தயாராக உள்ளோம். கடந்த ஆண்டு, எங்கள் இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து, ஒரு புதிய சாதனையை படைத்தது. இந்த ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் அதே ஈர்க்கக்கூடிய அளவில் இருக்கும் என்று நாங்கள் தற்போது கணித்துள்ளோம்.

இரு அரசாங்கங்களின் கவனத்திற்குரிய சவால்களின் பட்டியலை பிரதமர் எங்களிடம் வழங்கினார். நாங்கள் அவற்றைச் செயல்படுத்துவோம். நமது நாடுகள் படிப்படியாக தேசிய நாணயங்களில் பரஸ்பர தீர்வுகளுக்கு நகர்கின்றன. அவை ஏற்கனவே 96% வணிக பரிவர்த்தனைகளைக் கொண்டுள்ளன. எரிசக்தி - எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்குத் தேவையான அனைத்தையும் நிலையான விநியோகம் செய்வதில் வெற்றிகரமான கூட்டாண்மைகளையும் நாங்கள் காண்கிறோம். ஐ.நா., ஜி20, பிரிக்ஸ், எஸ்சிஓ மற்றும் பிற அமைப்புகளில் இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இந்த அமைப்புகள் அனைத்திலும் எங்கள் உரையாடலையும் ஒத்துழைப்பையும் தொடருவோம்.

கடந்த அரை நூற்றாண்டாக, நமது நாடு, வான் பாதுகாப்புப் படைகள், விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படை உள்ளிட்ட இந்திய ராணுவத்தை ஆயுதபாணியாக்கவும் நவீனப்படுத்தவும் உதவி வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையின் முடிவுகளில் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி திருப்தி அடைகிறோம். இந்தியா மற்றும் ரஷ்யாவின் மக்கள் ஆகியோரின் நலனுக்காக இந்த கூட்டணி மேலும் ஆழப்படுத்த உதவும் என்று நான் நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும். பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை முன்னுரிமைப்படுத்த தொடர்ந்து இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு பேசினார்.

பிரதமர் மோடி, புடின் சந்திப்பின் போது 2030 பொருளாதாரத் திட்டத்தை இறுதி செய்வதைத் தவிர, சுகாதாரம், போக்குவரத்து, இருநாடுகள் இடையே பரிமாற்றம், உணவுப் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, மக்களிடையே பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பல ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். மேலும் எண்ணெய், எண்ணெய் பொருட்கள், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்பங்கள், எண்ணெய் வயல் சேவைகள், மேல்நிலை தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, எல்என்ஜி, எல்பிஜி தொடர்பான உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு இடையேயான கூடுதல் ஒத்துழைப்பு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

* இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புடினுக்கு, ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார்.

* இந்தியா மற்றும் ரஷ்யா செய்திகளை தொடர்ந்து பரிமாறிக் கொள்வதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பிடிஐ) மற்றும் ரஷ்ய செய்தி நிறுவனமான (டாஸ்) கையெழுத்திட்டன.

* பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமை

பிரதமர் மோடி கூறுகையில்,’பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்று போராடி வருகின்றன. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, குரோகஸ் நகர மண்டபத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலாக இருந்தாலும் சரி - இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் ஒன்றுதான். பயங்கரவாதம் மனிதகுலத்தின் மதிப்புகள் மீதான நேரடித் தாக்குதல். அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை நமது மிகப்பெரிய பலம் என்பது இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை’ என்றார்.

* 7,200 கிமீ தூர வழித்தடம்

சர்வதேச வட தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC) என்பது இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே சரக்குகளை நகர்த்துவதற்கான 7,200 கி.மீ நீளமுள்ள கடல், சாலை, ரயில் உள்ளிட்ட பல-முறை போக்குவரத்து திட்டமாகும்.

* ஜனாதிபதி விருந்துக்கு கார்கே, ராகுல் புறக்கணிப்பு: சசிதரூருக்கு அழைப்பு

ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவை விட்டு புறப்படும் முன்பு நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் விருந்து வழங்கப்பட்டது. இதில் பாரம்பரிய வழக்கப்படி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோர் அழைக்கப்படவில்லை. ஆனால் பா.ஜவுக்கு ஆதரவாக செயல்படும் சசிதரூர் மட்டும் அழைக்கப்பட்டார். அவர் அதில் கலந்து கொண்டார்.

* கூடங்குளத்தில் 6 அணு உலையிலும் முழு மின் உற்பத்திக்கு உதவி

ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில்,’ ஆண்டுதோறும் இருதரப்பு வர்த்தக அளவை ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தை கட்டுவதற்கான ஒரு முதன்மை திட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். ஆறு அணுமின் நிலையங்களில் இரண்டு ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. இந்த அணுமின் நிலையத்தை முழு மின் உற்பத்திக்கு கொண்டு வருவது இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்தியாவுக்கு சிறிய அணு உலைகள் மற்றும் மிதக்கும் அணு மின் நிலையங்களை நிர்மாணிப்பதில் ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்றார். தற்போது இருநாடுகள் இடையே ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது.

* துருவ கடல் பகுதியில் கப்பல் இயக்க பயிற்சி

உறைபனியால் சூழப்பட்ட ஆர்டிக், அண்டார்டிக் துருவ கடல் பகுதியில் கப்பல் இயக்குவதற்கான நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. இதுதொடர்பாக ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திற்கும் ரஷ்ய கூட்டமைப்பின் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

* யூரேசியா என்றால் என்ன?

பிரதமர் மோடி, புடின் பேச்சு வார்த்தையில் அதிகம் இடம் பெற்றது இந்தியா, யூரேசியா பொருளாதாரம் ஆகும். யூரேசியா என்பது ரஷ்யா, ஆர்மீனியா, பெலாரஸ், ​​கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவை ஐந்து உறுப்பு நாடுகள் இடம் பெற்றவை ஆகும். இந்தியாவும், யூரேசிய பொருளாதார ஒன்றியமும் கடந்த வாரம் டெல்லியில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.

* சென்னை வழியாக ரஷ்யாவுக்கு கடல் போக்குவரத்து தொடர்பு

பிரதமர் மோடி பேசுகையில்,’ இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பை மேம்படுத்துவது ஒரு முக்கிய முன்னுரிமை. சர்வதேச வட தெற்கு போக்குவரத்து வழித்தடம்(INSTC), வடக்கு கடல் பாதை, சென்னை-விளாடிவோஸ்டாக் வழித்தடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் நாங்கள் முன்னேறுவோம். துருவ நீரில் இந்திய மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் இப்போது ஒத்துழைப்போம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஆர்க்டிக்கில் எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். கப்பல் கட்டுமானத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பு, மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது .மனிதவள இயக்கம் நமது மக்களை இணைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் புதிய பலங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கும். இதை மேம்படுத்துவதற்காக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்

* புடினுக்கு மோடி கொடுத்த பரிசுகள்

இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புடினுக்கு, பிரதமர் மோடி அளித்த பரிசுகள்:

1. அசாம் கருப்பு தேநீர் 2. காஷ்மீர் குங்குமப்பூ

3. மகாராஷ்டிராவின் கைவினை வெள்ளி குதிரை

4. அலங்கரிக்கப்பட்ட முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் தொகுப்பு

5. ஆக்ராவிலிருந்து கைவினை செய்யப்பட்ட பளிங்கு சதுரங்க தொகுப்பு

6. பகவத் கீதையின் ரஷ்ய பதிப்பு

* ரஷ்யா, உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை அமைதியின் பக்கம் உள்ளது: புடினிடம் பிரதமர் மோடி விளக்கம்

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பிரதமர் மோடி நேற்று மேற்கொண்டார். மோதலுக்கு ஒரு இணக்கமான தீர்வைக் காண அனைத்து அமைதி முயற்சிகளிலும் இந்தியா தோளோடு தோள் நிற்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில்,’ உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமைதியின் பக்கம் இருப்பதால் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து நாங்கள் விவாதங்களை நடத்தி வருகிறோம். ஒரு நெருங்கிய நண்பராக, நீங்கள் நிலைமை குறித்து தொடர்ந்து எங்களுக்குத் தெரிவித்து வருகிறீர்கள். நம்பிக்கை ஒரு பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன்.

நாம் அனைவரும் அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். சமீபத்திய முயற்சிகளை நான் அறிவேன், உலகம் அமைதியை நோக்கித் திரும்பும் என்று நான் நம்புகிறேன். இந்தியா நடுநிலையானது அல்ல என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்; இந்தியாவுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, அந்தப் பக்கம் அமைதி. அனைத்து அமைதி முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் அனைத்து அமைதி முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நின்று கொண்டிருக்கிறோம்’ என்றார். அதற்கு பதில் அளித்த புடின்,’ உக்ரைன் போரில் அமைதியான தீர்வை நோக்கி ரஷ்யா செயல்பட்டு வருகிறது’ என்றார்.

Advertisement