நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லாத இந்தியா மீது 24 மணி நேரத்தில் அதிக வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
நியூயார்க்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கும் இந்தியாவுக்கு அபராதமும் விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் நேற்று முன்தினம் மீண்டும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தன் சமூக ஊடக பதிவில், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதுடன், அதை வௌிச்சந்தையில் கொள்ளை லாபத்துக்கு விற்று பயனடைந்து வருகிறது. இதற்காக இந்தியா மீதான வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை உயர்த்துவதாக டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நியூஜெர்சியில் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது, “அமெரிக்காவுடன் இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை. அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. அதனால் இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தோம். தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் 25 சதவீத வரியை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளேன்” என இவ்வாறு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
* அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலைப்பாடு: இந்தியா பதிலடி
ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடங்கிய பிறகு, காலம்காலமாக கச்சா எண்ணெய் சப்ளை செய்து வந்த நாடுகள் தங்கள் விநியோகத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பி விட்டன. இதனால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி சந்தையின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்று அப்போது அமெரிக்காவே தீவிரமாக ஊக்குவித்தது.
ஆனால் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவைக் குறிவைப்பது நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உலக சந்தை நிலவரத்தால் ஏற்பட்ட கட்டாயத்தின் பேரிலேயே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியாவைக் குறை கூறும் நாடுகளே, அத்தியாவசிய கட்டாயம் கூட இல்லாத நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், எரிசக்தி மட்டுமல்லாது, உரங்கள், சுரங்கப் பொருட்கள், இரும்பு, எஃகு மற்றும் இயந்திரங்களையும் ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்குகிறது. அதேபோல, அமெரிக்கா தனது அணுசக்தி தொழிலுக்கான யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு, மின்சார வாகனத் தொழிலுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.