வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் ஜப்பானில் தம்பட்டம் அடித்த டிரம்ப்
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலைத் தாமே தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மே மாதம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே குறுகிய கால ராணுவ மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தாமே தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அப்போதிருந்தே தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், அங்குள்ள தொழிலதிபர்களுடன் இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து மீண்டும் பேசிய அவர், தனது தலையீட்டால்தான் அந்தப் போர் முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், ‘இரு அணுசக்தி நாடுகளுக்கும் இடையே நடந்த அந்த மோதலின்போது, புத்தம் புதிய, அழகான ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த நான், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரிடம், சண்டையை நிறுத்திக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுடனான அனைத்து வர்த்தகத்தையும் அமெரிக்கா நிறுத்திவிடும் என்று கூறினேன். அதன்பிறகு 24 மணி நேரத்திற்குள் அவர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்’ என்று கூறினார்.
டிரம்பின் இந்த ‘ஏழு விமானங்கள்’ சுடப்பட்டது குறித்த கூற்றுக்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. இதுகுறித்து இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் சமீபத்தில் கூறுகையில், ‘அந்த மோதலின்போது பாகிஸ்தானின் 11 முதல் 12 வரையிலான விமானங்களை இந்திய விமானப்படை செயலிழக்கச் செய்தது. பாகிஸ்தான் கூறுவதெல்லாம் வெறும் கற்பனைக் கதைகள்’ என்றார். முன்னதாக, ஐந்து இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. டிரம்ப் முன்பு ஐந்து விமானங்கள் எனக்கூறிய நிலையில், தற்போது ஏழு விமானங்கள் என மாற்றிப் பேசியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.