வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை முக்கிய சந்திப்பு பகுதிகளில் உயர் கோபுர விளக்கு அமைக்கப்படுமா?
*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் ரோடுகளான, பல்லடம் ரோடு, வால்பாறை ரோடு, உடுமலை ரோடு, மீன்கரை ரோடு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வரை பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே வளைவாக குறுகலாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.
பொதுமக்கள் அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கையையடுத்து, வெவ்வேறு கட்டமாக விரிவாக்க பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பொள்ளாச்சியில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கம் இதனால், அந்த வழியாக வாகனங்கள் விரைந்து சென்று வர எளிதாக உள்ளது. ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டாலும், மூன்று ரோடு மற்றும் நான்கு ரோடு சந்திப்பு பகுதிகளில் அதிவேகமாக வரும் வாகனங்களால், இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
அதிலும், பல்லடம் ரோடு ராசக்கபாளையம் அருகே புறவழிச்சாலை பிரிவு, தொப்பம்பட்டி பகுதி மற்றும் மீன்கரை ரோடு அம்பராம்பாளையம் சுங்கம், வால்பாறை ரோடு நா.மூ.சுங்கம் உள்ளிட்ட பல இடங்களில் உயாகோபுர விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது.
மேலும், சில இடங்களில் வளைவு மற்றும் மேடாக இருப்பதால், அதிவேகமாக சென்று திரும்பும்போது விபத்து நேரிடுகிறது. எனவே, விரிவுபடுத்தப்பட்ட நெடுஞ்சாலை பகுதி முக்கிய பிரிவுகளில் உயர்கோபுர விளக்கு அமைத்து, விபத்து உள்ளிட்ட விபரீத சம்பவத்தை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.