நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, எமரால்டு அணையின் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஊட்டி: ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணையின் இயற்கை அழகு சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பசுமை நிறைந்த காடுகள், புல்வெளிகள், பெரிய மலைகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகள் என இயற்கை அழகு சூழ்ந்து காணப்படுகிறது. இதனைக் காணவே ஏராளமான வெளி மாநில மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகின்றனர். இங்கு நிலவும் காலநிலை சில வெளிநாடுகளிலும் காணப்படுவதால், வெளிநாடுகளில் இருந்தும் இதனை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஊட்டிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வழக்கம்போல் பூங்காக்கள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க விரும்புவதில்லை. மாறாக இயற்கை சார்ந்த சுற்றுலாவையே விரும்புகின்றனர்.
இதனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இயற்கை சார்ந்த பகுதிகளில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழல் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் சூழல் சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை வனத்துறை சார்பில் வெகு தூரம் காட்டிற்குள் வாகனம் மூலம் வனத்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த மலைகளில் இருந்து தாழ்வான பகுதிகளில் காணப்படும் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ்கின்றனர். மேலும், அவைகளை புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக எமரால்டு அணை நிரம்பி பரந்து விரிந்து காணப்படுகிறது. இயற்கை சூழ்ந்த மலைகளுக்கு நடுவே உள்ள இந்த அணை தற்போது ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி, ஊட்டியில் இருந்து எமரால்டு, இத்தலார் வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் மஞ்சூர் பகுதிக்கு செல்லும் பொதுமக்களும் இந்த இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் இந்த அணையை புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.