பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமாவாசை,பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம்.அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது,சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.அவர்கள் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு, அருவியில் குளித்து சென்றனர். மேலும், கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் திருமூர்த்தி மலைக்கு வந்து அருவியில் குளித்து செல்கின்றனர்.