பென்னிகுக் நினைவு மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகளின்றி சுற்றுலா பயணிகள் அவதி
*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கூடலூர் : லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் நினைவு மணி மண்டபத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியாறு அணையை கட்டித் தந்த கர்னல் ஜான் பென்னிகுக் நினைவை போற்றும் வகையில், தேனி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கேரளா எல்லையை ஒட்டிய லோயர் கேம்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 2500 சதுர பரப்பளவில் சுமார் 1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுக் உருவச் சிலையுடன் மணி மண்டபம் கடந்த 2013ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்படும் இந்த மணி மண்டபத்தை விரிவுபடுத்தப்பட்ட சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இருப்பதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி இந்த மணிமண்டபம் அமைந்துள்ளதால், தேக்கடி,சபரிமலை, கொச்சின் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் வழித்தடத்தில் இந்த மணிமண்டபம் அமைந்துள்ளதால் இரு மாநிலத்திற்கும் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் பென்னிகுவிக் வரலாற்றை அறிந்து கொள்ளவும், பெரியாறு அணை வரலாற்றை தெரிந்து கொள்ளவும் இந்த மணிமண்டபத்துக்கு வருகை தருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக ஏற்கனவே இருந்த குடிநீர் தொட்டி பயன்படுத்தாத முடியாத நிலையிலும், சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டி கிடப்பதாலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமடைகின்றனர்.
தொடர் விடுமுறை ,விசேஷ நாட்களில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில் கூடலூரை அடுத்து குமுளியில் மட்டுமே சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்தும், சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.