குன்னூர் தேயிலை தோட்டங்களில் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
குன்னூர் : குன்னூரில் பனி மூட்டம் அதிகளவில் காணப்படுதால், இயற்கை காட்சிகளை காணமுடியாமல் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் தேயிலை செடிகளுக்கிடையே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டம், குன்னூரில், அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் குறைந்து, இதமான காலநிலை நிலவுகிறது.
அங்குள்ள சுற்றுலா மைங்களில், பனி மூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. லேம்ஸ் ராக், டால்பின்ஸ் நோஸ் ஆகிய காட்சி முனைகளில், எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவுக்கு, கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. ஏற்கனவே டால்பின் நோஸ் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் லாம்ஸ்ராக் காட்சி முனையிலும் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பள்ளத்தாக்கு காட்சிகள், சமவெளிப்பகுதிகளை பார்க்க முடியாததால், சுற்றுலா பயணிகள், ஏமாற்றமடைந்து வருகின்றனர். இதனால், குன்னூரில் உள்ள சுற்றுலா மையங்களில் கூட்டம் குறைந்து வருகிறது.
பகல் நேரங்களிலேயே வாகனங்களில் முகப்பு விளக்கை பயன்படுத்தி, வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பல்வேறு சுற்றுலா தளங்களில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் லாம்ஸ்ராக் காட்சி முனை செல்லும் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் குவியும் சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்திற்கிடையே தேயிலை தோட்டங்களின் நடுவே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.