ஊட்டி, புறநகரில் கொட்டிய மழை குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டி : ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. இதனால், கடும் குளிர் ஏற்பட்டுபொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் துவங்கிய தென்மேற்கு பருவமழை விட்டபாடில்லை.
கன மழை பெய்யவில்லை என்ற போதிலும், கடந்த 3 மாதங்களாக நீலகிரியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இம்மாதம் துவக்கத்தில் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. எனினும், கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும், எப்போதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் வைத்திருந்தது. ஆனால், நேற்று பகலில் எதிர்பார்த்த அளவிற்கு கன மழை பெய்யவில்லை. மாறாக, பிற்பகலுக்கு மேல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
காத்தாடிமட்டம், காந்திப்பேட்டை, நுந்தளா மட்டம், 6வது மைல், காட்டேரி, கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் நேற்று மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. மற்ற பகுதிகளில் மழை குறைந்தே காணப்படுகிறது.
மேலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவனி, அவலாஞ்சி, எமரால்டு போன்ற நீர்படிப்பு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்குகு மேலாக ஊட்டி மற்றம் புறநகர் பகுதிகளில் எந்நேரமும் மேகமூட்டம் மற்றும் காற்றுன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.
இதனால் நேற்று குளிர் வாட்டியது. மேலும், அதிகாலை நேரங்களில் கடும் மேக மூட்டம் காணப்படுவதால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதேசமயம் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மின் உற்பத்தி மற்றும் குடிநீருக்காக பயன்படும் அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்தே காணப்படுகிறது.