ஆழியாற்றில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஆழியார் அணையை ஆற்றோரம் சுற்றி பார்க்க வரும் பயணிகள் பாலத்தின் கீழ் பகுதி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட இடங்களில் குளிக்க தடை உள்ளது.
கடந்த சில மாதமாக ஆழியாற்று தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், தற்போது மீண்டும் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க துவங்கியுள்ளனர்.
போதிய கண்காணிப்பு இல்லாததால் விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் தடை செய்யப்பட்ட பகுதி என்று தெரியாமல் குளிக்கின்றனர். தற்போது மழை குறைவால் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
தடுப்பணை அருகே எச்சரிக்கை பலகை வைத்திருந்தாலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வருங்காலங்களில் ஆழியாற்றில் தடையை மீறி குளிப்போரை தடுக்கவும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.