சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்; சீறிப் பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி: திடீரென மதகுகளில் நீர் திறக்கப்பட்டது எப்படி?
பெங்களூரு: கர்நாடகாவில் அணைக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர், மார்க்கோனஹள்ளி அணைப் பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள நீரில் இறங்கியுள்ளனர்.
அப்போது, அணையின் மதகுகளில் இருந்து திடீரென நீர் திறந்துவிடப்பட்டதால், சீறிப் பாய்ந்த வெள்ளத்தில் நீரில் இருந்த 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த கோர விபத்தில் சிக்கிய ஆறு பேர் நீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், நவாஸ் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் நான்கு பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தும்கூரு எஸ்பி அசோக் கூறும்போது, ‘விபத்தில் சிக்கியவர்களில் நவாஸைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆவர். அணையின் நீர்வரத்து திடீரென அதிகரித்ததே விபத்துக்குக் காரணம் என அணைப் பொறியாளர்கள் தெரிவித்தாலும், மதகுகள் திறக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.