பூம்புகாரில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் விரைவில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் இராஜேந்திரன் தகவல்
சென்னை: பூம்புகாரில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் விரைவில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர்; முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறையில் மாவட்ட வாரியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிநாட்டின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கிய துறைமுகம் நகரமான பூம்புகாரில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் ரூபாய் 21.98 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதில் நுழைவு கட்டண அறை, தகவல் மையம், வாகனம் நிறுத்தும் இடம், சுற்றுச்சுவர் அமைத்தல், பொருட்கள் வைக்கும் அறை, நடைபாதை, கழிப்பறை, போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பாரம்பரிய மின் விளக்குகள் ஏற்பாடு மற்றும் கட்டிடக்கலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும். சுற்றுலாத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் நம் பாரம்பரிய மிக்க தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற கோவில்கள், புராதான சின்னங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி வால்பாறை போன்ற இயற்கையாக அமையப்பெற்ற மலைவாச சுற்றுலாத் தலங்கள்.
தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாவட்டந்தோறும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் போக்குவரத்து முதற்கொண்டு, விருந்தோம்பல் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்திதர வேண்டும் என சுற்றுலா உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அலுவலர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச.கவிதா, கண்காணிப்பு பொறியாளர், திட்டப் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.