சுற்றுலா வாகனங்களின் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
ஊட்டி : சுற்றுலா பயணிகள் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.
தற்போது, இரண்டாவது சீசன் நடந்து வரும் நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு வரும் வாகனங்களில் ஏர்ஹாரன்கள்பயன் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, ஊட்டி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் ஊட்டி நகரில் பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்தனர்.
இதில், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வெளிமாநில பஸ்கள் உள்பட 10 வாகனங்களில் இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்திற்குள் 12 மீட்டர் நீளம் உள்ள வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 மீட்டருக்கும் அதிகமான ஒரு சில வாகனங்களும் ஊட்டிக்கு வந்திருந்தது தெரிய வந்தது. இந்த வாகனங்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.