சுற்றுப்பயணத்துக்காக வசூலித்த பணத்தை மொத்தமா சுருட்டிய விவகாரத்தை சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாஜியின் குரலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரை கூட்டத்தில் இருந்தே வெளியேற்றிட்டாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி, செய் ஆறு, வந்தா வாசி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு வர்ற 15ம் தேதி இலைபார்ட்டியோட ஜெனரல் செக்ரட்ரி சுற்றுப்பயணம் வர்றாராம்.. இதுக்கான கூட்டம் வந்தா வாசி ஏரியாவுல நடந்துச்சு.. கூட்டத்துல டிஸ்ட்ரிக் செக்ரட்ரியும், பெயர்ல தூசிய வெச்சிருக்குறவரும் மாஜி மந்திரி முக்கூர்காரர்னு பேசினாங்க.. அப்போது கூட்டத்துல பங்கேற்ற நிர்வாகிங்க, வர்ற சட்டமன்றத் தேர்தல்ல வந்தா வாசி தொகுதியை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட முன்னுரிமை அளிக்கணும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்யக்கூடாது. போன எலக்ஷன்ல மாங்கனிக்கு ஒதுக்கிட்டு, இங்க போட்டியிட்டதால் தோல்வி அடைந்தார். அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாதுன்னு சொன்னாங்க.. அதுக்கு, மாஜி மந்திரி முக்கூர்காரர், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவங்க தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்ளணும்.. கட்சி பணி செய்ய வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளணும்.. வந்தா வாசி தொகுதியில செய் ஆறு தொகுதியை சேர்ந்த 3 பேர் முயன்று வர்றாங்க.. ஆனா, வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வெச்சிருக்காங்க.. தொடர்ந்து கட்சி பணி செய்தால் வாய்ப்பு உங்களை நாடி வரும்னு சொல்லியிருக்காரு முக்கூர்காரர்.. அப்போது கூனம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வாக்குவாதம் செய்ததால், அந்த நபரை கூட்டத்துல இருந்து வெளியேற்றி இருக்காங்க.. கேள்வி கேட்டா, கட்சிக்காரங்கள வெளியேற்றிடுவீங்களான்னு புலம்பல் சத்தம் கேட்க தொடங்கியிருக்குது.. இப்படி ஜென்ரல் செக்ரட்ரி வர்றதுக்கு முன்னாடியே யார் செலவு செய்றதுன்ற பிரச்னை, தொகுதி யாருக்கு என்ற பிரச்னைன்னு, இலைபார்ட்டியில பல இடியாப்ப சிக்கல்கள் இருக்குதுன்னு ரத்தத்தின் ரத்தங்களே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கிகளின் போஸ்டர் பரபரப்பா பேசப்படுதாமே.. என்னா விஷயம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மதுவுக்கு பெயர்போன புதுச்சேரியில் காக்கியில் பல மாற்றங்களை கொண்டு வந்தாலும் கட்டப் பஞ்சாயத்துகள் ஓய்ந்த பாடில்லையாம்.. சமூக இயக்கங்கள் பெயரில் சிலர் ஸ்டேஷன்களில் கருப்பு- வெள்ளை சீருடை நபருடன் புகுந்து துணிகர பேரத்தில் ஈடுபடுகிறார்களாம்.. இதனால் ஸ்டேஷன் எல்லாம் நீதிமன்றமாக மாறும் அவலம் உருவாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குமுறி வருகிறதாம்.. சமீபத்தில் ஸ்டேஷனுக்குள் புகுந்து நிலைய அதிகாரியை மிரட்டிய ‘‘வேல்” கட்சியின் தமிழக நிர்வாகி சிறை சென்ற நிலையில் உள்ளூர் நிர்வாகியோ தொடர்ந்து தலைமறைவாக உள்ளாராம்.. அவரை தேடி வீட்டிற்கு சென்ற காக்கிகள், காரை மட்டும் பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார்களாம்.. பதுங்கியுள்ள உள்ளூர் நிர்வாகியோ சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினாராம்.. ஆனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாம்.. இதனால் சரணடைவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை உருவாகியிருக்க விழிபிதுங்கி நிற்கிறாராம்.. இதுஒருபுறமிருக்க ‘யோக்கியன் வரான் வழிவிடு... இப்படிக்கு பணம் பறிகொடுத்த அப்பாவிகள்..’ என்ற விமர்சன போஸ்டர்கள் புதுச்சேரி முழுக்க காக்கிகளின் பினாமி போர்வையில் ஒட்டப்பட ஊரெல்லாம் இதுகுறித்த பேச்சுதானாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சுற்றுப்பயணத்திற்காக வசூலித்த பணத்தை மொத்தமா சுருட்டிட்டாங்களாமே..’’ என்று ஆச்சர்யமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் சமீபத்தில் இலைக்கட்சி தலைவர் சுற்றுப்பயணம் போனாரு இல்லையா? இதற்காக பல்வேறு தரப்பிலும் நிதிகளை ஆங்காங்கே வசூலித்து, பல கோடி ரூபாய் தண்ணீராய் செலவிடப்பட்டதாம்.. ஆனால், எங்குமே கூட்டம் குறிப்பிட்டு சொல்லும்படியாக கூடவில்லையாம்.. கூட்டத்தை கூட்டுவதற்கு என கட்சி தலைமையில் இருந்து கணிசமான தொகை மாவட்ட அளவில் கொடுக்கப்பட்டிருக்கு.. பணத்தை பெற்றுக் கொண்ட நிர்வாகிகள், அள்ளி வாங்கியதை கிள்ளி கொடுத்ததைப் போல பெயரளவுக்கு செலவு கணக்கு காட்டிவிட்டு, மொத்தமாக சுருட்டிக் கொண்டார்களாம்.. பணம் வந்து சேராதது தொடர்பான வீடியோவும் வௌியாகி வைரலான நிலையில், மாவட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு சேலத்துக்காரர் தரப்பில் இருந்து கடுமையான டோஸ் விழுந்ததாம்.. யார், யாரெல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு சுருட்டியவர்கள் என்ற பட்டியலையும் தலைமை தரப்பு கேட்டுள்ளதாம்.. இதனால், மாவட்டம் முழுவதும் பலர் மீது கட்சிரீதியான நடவடிக்கை பாயும் என்பது தான் மாவட்டம் முழுவதும் ஒரே பேச்சாம்.. அதேநேரம் சேலத்துக்காரர் பேசும்போது, அம்மாவட்டத்தின் மாஜி அமைச்சரின் பெயரை எங்குமே குறிப்பிடவில்லையாம்.. இது அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் மன உளைச்சலை தந்திருக்காம்.. இதற்கு தற்போதைய மாவட்ட முக்கிய நிர்வாகியான முருகக்கடவுள் பெயர் கொண்டவரே காரணமென்றும் கூறி வருகின்றனராம்.. விரைவில் மாஜி அமைச்சர் அணி மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரின் பிரசார வரவேற்பில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாமே கோஷ்டி பூசல்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மயில் நடனமாடிய மாவட்டத்தில் சேலத்துக்காரர் பிரசாரம் மேற்கொண்டபோது தனது பலத்தை காட்டும் வகையில் கட்சியில் முக்கிய நிர்வாகியான ‘கோல்டு’ பெயரை கொண்டவர் சேலத்துக்காரருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தாராம்... தொடர்ந்து, அதற்கான பாராட்டையும் சேலத்துக்காரரிடம் பெற்றாராம்.. இது கட்சியில் உள்ள மாஜி தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.. இதனையடுத்து மாஜி எம்எல்ஏ, மாஜி மாவட்ட செயலாளர் ஆகிய ரெண்டு பேர் சேர்ந்து கோல்டானவருக்கு செக் வைப்பதற்காக அவருக்கு தெரியாமல் அதே மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட சேலத்துக்காரருக்கு பெரிய அளவில் பிரமாண்ட வரவேற்பு அளித்து அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டாங்களாம்.. இதில் அதிர்ச்சிக்குள்ளான கோல்டு பெயரானவர் தங்களுக்கு தெரியாமல் சேலத்துக்காரருக்கு எப்படி வரவேற்பு அளிக்கலாம் என அவரது ஆதங்கத்தை கட்சியில் நெருங்கிய ஆதரவாளர்களிடம் கொட்டி தீர்த்துவிட்டாராம்.. கட்சியில் திரைமறைவில் இருதரப்பு இடையே இருந்து வந்த கோஷ்டி பூசல் சேலத்துக்காரருக்கு வரவேற்பு கொடுப்பது மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கட்சிக்குள்ளே அடிமட்ட தொண்டர்களுக்குள் பேசிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.