தவெக 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால் அரசுக்கு வருவாய் இழப்பு: ஐகோர்ட் கிளையில் வழக்கு
மதுரை: தவெக 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், ஓராண்டு கட்டண வசூல் தொடர்பாக அறிக்கையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயருத்ரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான 31.2 கிமீ தூர சாலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை டோல் கட்டணம் வசூலாகிறது.
இந்தச் சாலையில் சமீப காலங்களில் அரசியல் கட்சிகளின் மாநாடு, பேரணி, மத அமைப்புகளின் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டோல் கட்டணம் செலுத்தி வாகனங்களில் பயணிப்பவர்கள் உரிய நேரத்தில் பயண இடத்தை சென்றடைய முடியாத நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் இந்தச் சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு நெல்லை, தூத்துக்குடியிலிருந்து வந்த 1.30 லட்சம் வாகனங்கள் கப்பலூர், எலியார்பத்தி டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளன. இதனால் அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இதே சாலையில் டோல் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களிடம் பாகுபாடு பார்ப்பதாகும்.
எனவே, கப்பலூர் முதல் உத்தங்குடி வரையிலான மதுரை சுற்றுச்சாலையில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் மாநாடு, பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும், திருமண மண்டபம், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்தும், ஏற்கனவே வழங்கிய அனுமதியை திரும்ப பெறுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலையில் கடந்த ஒரு ஆண்டில் எத்தனை வாகனங்கள் சென்றுள்ளன? எவ்வளவு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.