தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 38 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கண்டனம்
சென்னை: தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 1,44,634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 6,606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 82 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன.
இதில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு கட்டங்களாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில் ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் ரூ.25 வரை சுங்கக்கட்டண உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் மாற்றியமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்கிறது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுங்கக்கட்டணம் 5-10% வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 5-10% வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. அதன்படி ஏற்கனவே 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2025ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் ஒன்றிய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. ரூ.3000 கட்டினால் ஆண்டுக்கு 200 முறை சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட உள்பட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
அதன்படி ஜீப்,வேன், கார் ஆகிய நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.85 லிருந்து ரூ.90 உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்று வர ரூ.125லிருந்து ரூ.135 உயர்த்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ஒரு முறை சென்று வர கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.45 ஆகவும், இருமுறை பயணம் செய்ய ரூ.10 லிருந்து ரூ.65தாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.235லிருந்து ரூ.1325தாகவும் உயர்த்தபட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூறுகையில், ‘2008ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 38 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் மாற்றியக்கப்படுகிறது. இப்படி ஆண்டு தோறும் சுங்கக்கட்டண உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசியமான பொருட்களில் விலை உயரக்கூடும்.