என்னது எங்க அப்பாவை உனக்கு தெரியாதா? சுங்கச்சாவடி ஊழியர் மீது பாஜ தலைவர் மகன் தாக்குதல்: சிசிடிவி வீடியோ வைரல்
பெங்களூரு: பாஜ தலைவர் விஜுகவுடா பாட்டீலின் மகன் சமர்த்கவுடா, அவரது நண்பர்களுடன் சேர்ந்து சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகிறது. கர்நாடக பாஜ மூத்த தலைவர் விஜுகவுடாவின் மகன் சமர்த்கவுடா மற்றும் அவரது நண்பர்கள் விஜயபுராவிலிருந்து சிந்தகிக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது, விஜயபுரா - கலபுர்கி நெடுஞ்சாலையில் கன்னொலியில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியர் சுங்கக்கட்டணம் கேட்டிருக்கிறார். அதற்கு, நான் யார் தெரியுமா? பாஜ தலைவர் விஜூகவுடா பாட்டீலின் மகன் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த ஊழியர், யார் அந்த விஜூகவுடா என்று கேட்க, கடும் கோபமடைந்த சமர்த்கவுடாவும் அவரது நண்பர்களும் சேர்ந்து சங்கப்பா என்ற சுங்கச்சாவடி ஊழியரை மிகக்கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த மற்ற ஊழியர்கள் தடுத்து நிறுத்தி சங்கப்பாவை சிந்தகி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுங்கச்சாவடி ஊழியரை பாஜ தலைவரின் மகனும், அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியதன் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் தரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.