இன்று முதல் சென்னையில் புச்சி பாபு கிரிக்கெட் போட்டி: டிஎன்சிஏ நடத்துகிறது
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சார்பில் அகில இந்திய புச்சி பாபு நினைவு கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஐதராபாத் உட்பட பல்வேறு மாநில, மாநகரங்களைச் சேர்ந்த கிரிக்கெட் சங்கங்களின் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. டிஎன்சிஏ சார்பில் டிஎன்சிஏ தலைவர் 11, டிஎன்சிஏ 11 என 2 அணிகள் களம் காண உள்ளன. இந்தப் போட்டியில் களம் காணும் 16 அணிகள், தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் தலா ஒரு அணி அரையிறுதியில் களம் காணும்.
ஒவ்வொரு ஆட்டமும் தலா 3 நாட்கள் நடைபெறும். இறுதி ஆட்டம் மட்டும் 4 நாட்கள் ஆட்டமாக நடத்தப்படும். பைனல், செப். 6, 7, 8, 9ம் தேதிகளில் நடக்கும். எல்லா ஆட்டங்களும் சென்னையின் பல்வேறு கல்லூரி வளாகங்களில் நடைபெறும். முதல் சுற்று ஆட்டங்கள் 18ம் தேதி முதல் ஆக.20ம் தேதி வரை நடைபெறும். முதல் சுற்று ஆட்டங்களில் டிஎன்சிஏ தலைவர் 11-இமாச்சல் பிரதேசம், டிஎன்சிஏ 11-மும்பை, சட்டீஸ்கர்-மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்-இந்தியன் ரயில்வே, ஒடிஷா-பரோடா, அரியானா-பெங்கால், மத்தியபிரதேசம்-ஜார்கண்ட், ஐதராபாத்-பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.