தரையில் அமர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு...
பெஞ்சுகள் வாங்கிக் கொடுத்த பொறுப்புத் தலைமை ஆசிரியை!
விழுப்புரம் மாவட்டம், மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய ஓராசிரியர் தொடக்கப்பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியை அரசி, தனது பணி ஓய்வுக்கு முன்பாக, பள்ளி மாணவர்களின் நலனுக்காகத் தனது பேத்தியுடன் இணைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பெஞ்சுகளை வாகிக் கொடுத்துள்ள செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘மரகதபுரம் ஊராட்சி ஒன்றிய ஓராசிரியர் தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக பொறுப்புத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 2026ஆம் ஆண்டு மே மாதம் பணிஓய்வு பெற உள்ளேன். எனது நீண்டகாலப் பணி நிறைவடையும் தறுவாயில், பள்ளிக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. குறிப்பாக, மழைக்காலங்களில் பள்ளியின் சிமெண்ட் தரை அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால், தரையில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதை நான் கவனித்துள்ளேன். இதற்குத் தீர்வு காணும் வகையில், மாணவர்களுக்கு இருக்கைகள் வாங்கித் தர வேண்டும் என முடிவுசெய்தேன். பள்ளி மாணவர்களுக்கு பெஞ்சுகள் வாங்கிக் கொடுப்பது பற்றி எனது பேத்தி சிவானியிடம் தெரிவித்தேன். எனது நோக்கத்தைப் புரிந்துகொண்ட பேத்தி சிவானி, தனது நண்பர்களுடன் இணைந்து ரூ.1 லட்சம் திரட்டிக் கொடுத்தார். எனது பங்காக ரூ.1 லட்சத்தைச் சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சம் செலவில் 60 மாணவர்கள் அமரக்கூடிய வகையில் 30 புதிய பெஞ்சுகளை வாங்கி பள்ளிக்கு வழங்கினோம்’’ என்று தெரிவித்தார்.
தலைமை ஆசிரியரின் இந்த சீரிய முயற்சியால், தற்போது அந்த அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வசதியான பெஞ்சுகளில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் கல்வி பயின்று வருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் உடல்நலக்குறைவு காரணமாக மாணவர்கள் விடுப்பு எடுப்பது குறைந்துள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 25 ஆண்டுகள் பணியாற்றிய பள்ளிக்கு, தனது ஓய்வுக்கு முன்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் மாணவர்களுக்கு அடிப்படைத்தேவையான பெஞ்சுகளை வாங்கிக் கொடுத்துச் செல்லும் தலைமை ஆசிரியை அரசி அவர்களின் சேவையையும், அவருக்கு உறுதுணையாக நின்ற அவரது பேத்தி சிவானியின் செயலையும் அப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
- ஆனந்த்