டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்ஷா திட்ட நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியது பற்றி கேள்வி!!
சென்னை: தொழில்நுட்ப பணிகளுக்காக நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் எஸ்எஸ்ஏ நிதி நிறுத்தம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில்(நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) காலியாக உள்ள 1033 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. அதாவது தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவியியல், திறனறிவு மற்றும் மனக்கணக்கு தேர்வு(ஓம்ஆர் வடிவு) நடந்தது. இத்தேர்வை 48627 பேர் மட்டுமே எழுதினர். 43,882 பேர் எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை தமிழ்நாடு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இந்தி திணிப்பு, பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளாததால் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2192 கோடியை ஒன்றிய அரசு வழங்காத நிலையில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் எஸ்எஸ்ஏ(சமக்ர சிக்ஷா திட்டம் ) நிதி நிறுத்தம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியின் விவரம் வருமாறு:-
கூற்று: அரசுப் பள்ளிகளில் இந்தித் திணிப்பை தமிழ்நாடு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. மேலும் எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதம மந்திரி பள்ளிகளில் இணைய மறுத்துவிட்டது. எனவே ஒன்றிய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
காரணம்: தமிழக அரசின் இரு மொழி கொள்கையையும் மற்றும் தேசிய அளவில் சரியாக அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் மத்திய அரசு அங்கீகரித்தாலும், 2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் அது பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகளில் தனது பங்களிப்பை வழங்க விரும்புகிறது. இது தமிழக அரசால் கூட்டாட்சி நிர்வாக முறை என்ற கருத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டு கடுமையாக எதிர்க்கப்படுகிறது.
(A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
(B) கூற்றும் காரணமும் சரி, ஆயினும் காரணமே கூற்றிற்கான சரியான விளக்கம்
(C) கூற்று தவறு, காரணம் சரி
(D) கூற்றும் காரணமும் சரி ஆயினும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
(E) விடை தெரியவில்லை என்ற கேள்வி இடம் பெற்று இருந்தது