மசோதா தொடர்பான விவகாரத்தில் சட்டப்பேரவைக்கே அரசியலமைப்பின் முழு அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்விலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஆறாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவு எடுக்க முடியாது. ஆளுநர் என்பவர் சூப்பர் முதல்வர் போன்று செயல்பட அதிகாரம் இல்லை.
குறிப்பாக மசோதாவை கிடப்பில் வைத்திருந்தாலும் அல்லது திரும்ப அனுப்பினாலோ அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று கூற முடியாது. அவ்வாறான வழிமுறைகளை அரசியல் சாசன பிரிவு 200 ஆளுநருக்கு வழங்கவில்லை. இயற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டால் மட்டுமே அது செயலிழந்து விட்டதாக கூற முடியும். ஆனால் அதே நேரத்தில் திருப்பி அனுப்பும் போது அதனை மறு நிறைவேற்றம் செய்து ஒப்புதலுக்காக அனுப்பும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே செயலிழந்துவிட்டது என்று கூறுவது தவறானது ஆகும். அப்படியான அதிகாரம் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆளுநரின் அதிகாரங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டவை ஆகும். சட்டமன்ற கூட்டத்தொடர் கூடாத நேரங்களில் அமைச்சரவை, முதலமைச்சரின் ஆலோசனை படி அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க 213வது அரசியல் சாசன பிரிவு ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதங்களை உச்ச நீதிமன்றம் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் நீதித்துறையின் மறுஆய்விற்கு அப்பாற்பட்டவர்கள் என்று விலக்கு அளிக்கப்பட்டால், அது அரசியல் சாசனத்திற்கு முரணானதாக அமைந்து விடும். மேலும் அவர்களுடைய அதிகார வரம்பு நீதித்துறை மறுஆய்வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டால், அது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகார பகிர்வுக்கு முரணானதாக இருக்கும். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால், மசோதா விவகாரத்தில் சட்டப்பேரவைக்கே அரசியலமைப்பின் முழு அதிகாரம் உள்ளது.
மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்தது சரியான ஒன்றாகும். அதனால் இதுதொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது. குறிப்பாக ஆளுநர் ஒரு மசோதாவை, மோசமானது என்று முடிவு செய்ய முடியாது. மசோதா தவறானதாக இருந்தால் அதனை நீதிமன்றத்தின் மூலம் தடுக்கலாம். அதற்கான பணியை நீதிமன்றம் செய்யும், பல நேரங்களில் அரசியல் சாசனத்திற்கு முரணான சட்டங்கள் இயற்றப்பட்ட போது கூட நீதிமன்றம் தலையிட்டு அதனை ரத்து செய்திருக்கிறது. இதுவே நமது அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அதிகார பகிர்வு ஆகும். உதாரணத்திற்கு (காங்கிரஸ் ஆளும்) தெலுங்கானா மாநிலத்தில் சபாநாயகர் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காத போது நீதிமன்றம் சபாநாயகருக்கு உரிய நடவடிக்கை எடுக்க கெடு விதித்தது . அதேப்போன்று தான் தமிழ்நாடு, கேரளா ஆளுநர்கள் மசோதா மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தபோது தான் உச்ச நீதிமன்றம் தலையிட்டது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசியல் ரீதியாக வாதங்களை வைத்தால் அதுபோன்ற எதிர்வாதங்களை தானும் வைக்க வேண்டியது இருக்கும் என தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த நீதிமன்றம் அரசியல் போட்டிக்கான தளம் கிடையாது. அவ்வாறு மாறவும் கூடாது. இது வரை ஆண்டவர்கள், இப்போது ஆள்பவர்கள் என்று பார்த்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காது என்று தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமானஅரசியலமைப்பு பிரிவு பிரிவு 142யை பயன்படுத்தி, குடியரசு தலைவர் அல்லது ஆளுநர் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு பார்முலாவை வகுக்க முடியுமா என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், எந்தவொரு வெளிப்படையான தடைகள் இல்லாவிட்டால் அப்படி வகுக்க முடியும். குறிப்பாக அரசியல் சாசன 142வது பிரிவு படி, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு தனி அதிகாரத்தை பயன்படுத்த முடியும். பேரறிவாளன் உள்ளிட்ட பல வழக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநருக்கு மூன்று மாதம் கால அவகாசம் நிர்ணயித்தது மூலம் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனித்தனியாக மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுக காலதாமதம் ஏற்படும். எனவே பொதுவான கால நிர்ணயம் தேவையானது என்று தெரிவித்தார்.
மேற்குவங்க அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அரசியல் சாசன பிரிவு 200 மற்றும் 201 ஆகியவை தனித்து இயங்குமா என்பது தான் இங்கு கேள்வியாக உள்ளது.அதேபோல் தான் குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 201 என்பது அமைச்சரவையின் ஆலோசனை அடிப்படையிலா அல்லது தன்னிச்சையானதா என்ற கேள்வி தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளது.ஆளுநர் சட்டமன்றத்தின் விருப்பத்தை மீறி செயல்படுவது என்பது, அரசியலமைப்பிற்கு எதிரான செயல் ஆகும். மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநருக்கு எந்த விருப்புரிமையும் கிடையாது. மேலும் பிரிவு 200ன் படி ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது. அரசியல் சாசனம் வழங்காத ஒரு விஷயத்தை ஆளுநர் செய்ய முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.