தமிழக அரசு குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இருக்கும் பாராளுமன்ற சீட்டுகளில் ஒன்று கூட குறையாது. கூடுதல் தொகுதிகள்தான் கிடைக்கும் என்று பிரதமர் உறுதிப்படுத்தி இருக்கிறார். மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யாமல் விகிதாச்சார அடிப்படையில் செய்யப்பட்டு, சீட்டுகள் ஒதுக்கப்படும்.
இதில் கூடுதலான சீட்டுகள் கிடைக்குமே தவிர, யாருக்கும் எந்த குறைவும் ஏற்படாது. 2004-14 பத்தாண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுத்த தொகை, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 900 ஒரு கோடி ரூபாய். இதைவிட 2014 - 2024 வரையிலான காலத்தில் ஐந்து மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமித்ஷா பேசும்போது தமிழக அரசை விமர்சித்து பேசி, தமிழ்நாட்டில் உள்ள தேச விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நாட்டின் உள்துறை அமைச்சர் தேசிய விரோத ஆட்சி என்று பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.