கோயிலுக்கு வருவது நிம்மதியை தேடியே; அங்கும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது ஏற்க இயலாது - ஐகோர்ட் நீதிபதிகள் காட்டம்
மதுரை:கோயிலுக்கு வருவது நிம்மதியை தேடியே; அங்கும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது ஏற்க இயலாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்ட விரோதமாக தரிசன டிக்கெட் விற்பனை நடைபெறுவதாகவும் அதனை தடுத்து, டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த சண்முகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பக்தர்கள் கோயிலுக்கு வருவது மன நிம்மதியைத் தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது.
மேலும்," திருச்செந்தூர் சுவாமி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்டவிரோத தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க, அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கோயிலில் பாதுகாப்புக்கு தேவைப்படும் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்த தாத்துக்குடி எஸ்.பி.க்கு ஆணையிடுகிறோம், "இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.