திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்கு ரூ.385 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடெல்லி: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட நிதியின் மூலம் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் புதிய வகுப்புகளுக்கான கட்டிடம் மற்றும் குடியிருப்பு வசதிகள் உள்பட நவீன கல்வி வளாகம், கூடுதலாக மாணவர் விடுதிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான வசதிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகள் கட்டப்பட உள்ளது.
மேலும், மேம்பட்ட ஆராய்ச்சி பணிகளுக்காக பிரத்யேக அறிவியல் உபகரணம் மையம் ஒன்று அதிநவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட உள்ளது. உயர் கல்விக்கான நிதி முகமை, இந்தி திட்டத்துக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் மாநில திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ரூ.96.40 கோடி செலவில் கல்வி பிரிவுக்கான புதிய கட்டிடம், ரூ.46.63 கோடி மதிப்பில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மாணவிகள் தங்கும் விடுதி, ரூ.46.91 கோடி செலவில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதி, ரூ.19.95 கோடி செலவில் அறிவியல் உபகரண மையம், ரூ.16.84 கோடி மதிப்பில் அறிவியல் உபகரணங்கள் கொள்முதல்,
ரூ.46.16 கோடி செலவில் நிர்வாக கட்டிடத்துக்கான விரிவாக்க பணிகள், ரூ.62.97 கோடி மதிப்பில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான(அனைத்து வகை) குடியிருப்பு வசதிகள் மற்றும் ரூ.42.60 கோடி செலவில் 400 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான சூழலை மேம்படுத்துவதுடன், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு குடியிருப்பு வசதிகளை பெருமளவில் மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வளர்ந்து வரும் கல்வி சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முழுமையான வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்கு தேசிய உயர்கல்வி மேம்பாட்டுத்துறை முழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.