திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரியில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் அவற்றை கொள்முதல் செய்து கிட்டங்கிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிர ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, உள்ளிட்ட பகுதியில் குருவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 382 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை தினம் என்பதால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படாமல் இருந்த வண்ணம் சுமார் 50,000 நெல் மூட்டைகள் அங்கு தேக்கம் அடைந்திருக்கிறது. சாலையின் இருபுறங்களிலும் நெல்மணிகளை கொட்டி வைத்து காய வைத்து விவசாயிகள் வருகிறார்கள். இந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்தால் மட்டுமே அவர்களுடைய செலவு தொகையை எடுக்க முடியும். உடனடியாக நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.