திருவண்ணாமலையில் வாகன சோதனையின் போது பயங்கரம் சித்தி கண்ணெதிரே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 போலீஸ்காரர்கள் அதிரடி கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆந்திர மாநில இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுந்தர்(32), சுரேஷ்ராஜ்(30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த மினிவேனை தடுத்து நிறுத்தி, பைபாஸ் சாலை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, வேனில் 20 வயது இளம்பெண்ணும், 45 வயது பெண்ணும் இருந்துள்ளனர். இரவு நேரத்தில் எதற்காக 2 பெண்களை வேனில் அழைத்து வருகிறாய் என டிரைவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, இருவரும் உறவினர்கள் எனவும், கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பியதால் வேனில் அழைத்து வந்ததாகவும் டிரைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இருவரும் தாய், மகள் எனவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவரது பதிலில் திருப்தியடையாத கான்ஸ்டபிள்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர், வேனில் இருந்து 2 பெண்களையும் கீழே இறக்கி விசாரித்துள்ளனர். அதற்கு, தன்னுடைய சித்தியுடன் (தந்தையின் இரண்டாவது மனைவி) கோயிலுக்கு வந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கான்ஸ்டபிள்கள், இருவரையும் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும், வாழை லோடு இறக்கிவிட்டு வந்து அழைத்துச் செல்லுமாறும் டிரைவரிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், 2 பெண்களையும் தனித்தனியே பைக்கில் இருவரும் உட்கார வைத்து, திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் ஏந்தல் கிராமத்துக்கு அருகே மயான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சித்தியின் கண்ணெதிரில் 20 வயது இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், 2 பெண்களையும் அதே இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து கான்ஸ்டபிள்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இளம்பெண் மயக்கம் அடையவே சித்தி கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விசாரித்துள்ளனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணை சேர்த்துள்ளனர். தகவலறிந்து திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் மற்றும் ஏஎஸ்பி சதீஷ்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சுந்தர் சமீபத்தில் ஒழுங்கு நடவடிக்கையால் வெளி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.