விழாக்கோலம் பூண்டது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நாளை துவக்கம்: வரும் 3ம் தேதி மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாகலமாக தொடங்கி, 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை 6 மணி முதல் 7.15 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார். அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாட வீதியில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். கொடியேற்றத்தை முன்னிட்டு, வழக்கத்தைவிட இந்தமுறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவின் தொடர்ச்சியாக, நாளை மறுதினம் 25ம் தேதி காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்வசவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 29ம் தேதி காலை உற்வசத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளி தேர் விழாவும் நடைபெறும். விழாவின் 7ம் நாளான வரும் 30ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவாக, டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் பரம்பொருள் தத்துவத்துத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1500 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்க 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டது.
* 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
தீபத்திருவிழாவையொட்டி வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 7 டிஐஜிக்கள் மற்றும் 34 எஸ்பிக்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோயில் பிரகாரம், மாடவீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் சுமார் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர, முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* 4,764 சிறப்பு பஸ்கள், 16 சிறப்பு ரயில்கள்
தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட உள்ளது. மேலும், 4,764 சிறப்பு பஸ்கள் 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், 130 இடங்களில் 20 ஆயிரம் கார், வேன்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் 10 நாட்களும் செயல்படும் வகையில் நகரின் முக்கிய இடங்களிலும், கோயிலிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு வசதியாக 72 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.