திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்: அதிகாலையில் குவிந்த பக்தர்கள்..!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.