திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி களைகட்ட தொடங்கிய மாடு, குதிரை சந்தை..!!
திருவண்ணாமலை: தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் குதிரை மற்றும் மாடு சந்தை களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்றமாநிலங்களில் இருந்தும் சந்தையில் வியாபாரிகள் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழா போது மாடு மற்றும் குதிரை சந்தை நடத்தப்படுவது வழக்கம். கார்த்திகை திருவிழாவில் மாடு, குதிரைகள் வாங்கி சென்றால் வியாபாரம் பெருகும் என்பது நீண்ட காலமாக அப்பகுதியில் இருந்து வரும் நம்பிக்கை ஆகும். அதன்படி செங்கம் சாலையில் உள்ள சந்தை மைதானத்தில் நேற்று தொடங்கிய சந்தையில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான குதிரைகள் மற்றும் மாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
காங்கேயம், ஜெர்சி, ஒங்கோல், கிர் என பல்வேறு வகையான மாடுகள் ரூ.5,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை விற்பனையாகின்றன. இதுபோல் காட்டு வாடா, மார்வாரி உள்ளிட்ட குதிரைகள் சுமார் ரூ.10,000 முதல் ரூ. 2 லட்சம் வரை விற்பனையாகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு குதிரைகள் விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ள. இந்த ஆண்டு முதல் முறையாக சந்தையில் ஒட்டகம் கொண்டுவரப்பட்டுள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதில் சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று தொடங்கிய திருவண்ணாமலை கால்நடை சந்தை நாளை வரை உள்ளது.