திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 18.64 ஏக்கரில் ரூ.64.30 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி
*காணொலியில் முதல்வர் அடிக்கல் நாட்டினார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.64.30 கோடி மதிப்பிலான புதிய தங்கும் விடுதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமானவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது.
இங்குள்ள மலையே மகேசன் திருவடிவம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். குறிப்பாக, பவுர்ணமி நாட்களில் சுமார் 10 லட்சம் பக்தர்களும், சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலைக்கு சமீப காலமாக பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் திருவண்ணாமலையை மோட்சபுரி என அழைக்கின்றனர்.
இங்கு கிரிவலம் சென்று வழிபடுவது முக்தி பெறும் வழி என்ற நம்பிக்கை மேலோங்கியிருக்கிறது.எனவே, பக்தர்களின் வசதிக்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, ரூ.64.30 கோடி மதிப்பில் 18.64 ஏக்கர் பரப்பளவில் அமையும் பக்தர்கள் தங்கும் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.82 கோடி மதிப்பில் 750 நபர்கள் அமரும் வசதி கொண்ட பக்தர்கள் காத்திருப்பு கூடம் மற்றும் பிரசாத விற்பனை நிலையம், கிரிவலப்பாதையில் அருணகிரிநாதர் கோயில் அருகே 1112 நபர்கள் அமரும் வசதி கொண்ட ரூ.1.17 கோடி மதிப்பிலான சொற்பொழிவு அரங்கம் கட்டுமான பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சோணநதி தீர்த்தம் அருகே நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், அண்ணாமலையார் கோயில் தக்கார் மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், மேயர் நிர்மலாவேல்மாறன், கோயில் இணை ஆணையர் பரணிதரன், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், துணை மேயர் சு.ராஜாங்கம், மாநகர பகுதி செயலாளர் ப.ஷெரீப், அரசு வக்கீல் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கிரிவலப்பாதையில் தற்போது அமைய உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, 2,10,531 சதுர அடி பரப்பளவில் 476 நபர்கள் தங்கும் வகையில் அமைகிறது. அதில், 2 நபர்கள் தங்கும் வகையில் 128 அறைகளும், 6 நபர்கள் தங்கும் வகையில் 24 அறைகளும், 10 நபர்கள் தங்கும் வகையில் 6 அறைகள் கட்டப்படுகிறது. அதோடு, நான்கு தளங்கள் கொண்ட இந்த தங்கும் விடுதி அறைகள் குளிர்சாதன வசதியுடன் கூடியவை. அதோடு, லிப்ட், பார்க்கிங், உணவகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உளளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1.07 கோடியில் வணிக வளாகம்
திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு நந்தவன கட்டளை மூலம் ரூ.107 கோடி மதிப்பில் 20 கடைகள் கொண்ட பல்நோக்கு வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அதனை, காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதையொட்டி, திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில், மாநகர மேயர் நிர்மலாவேல்மாறன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்.
நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் சண்முகசுந்தரம், செயல் அலுவலர் ராகினி, ஆய்வாளர் மாதவன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.