திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான போட்டித்தேர்வு
*6 மையங்களில் 6,095 பேர் எழுதினர்
*ஐஜி தலைமையில் கண்காணிப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான போட்டித்தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. அதில், 6,095 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது.
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற இத்தேர்வில் பங்கேற்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் 6,902 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதையொட்டி, திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை அறிவியல் கல்லூரி, கரண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பகவான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆர்எம் லொயோலா மேல்நிலைப் பள்ளி உட்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், காலை 10 மணி முதல் பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது.
தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கும் முன்பு, தேர்வு எழுதுவோரை முழுமையாக சோதித்த பிறகே அனுமதித்தனர். கை கடிகாரம், எலக்ட்ரானிக் பொருட்கள், பெண்கள் தலையில் சூடியிருந்த மலர்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேர்வு வளாகத்துக்கு வெளியில் வைத்து விட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
தேர்வு அறைகள் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்பட்டது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த போட்டித்தேர்வில், 6,095 பேர் பங்கேற்றனர். 807 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மேலும், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 6 தேர்வு மையங்களை, ஐஜி சாமுண்டீஸ்வரி தலைமையில், எஸ்பி சுதாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.