திருவண்ணாமலை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்த கார்
திருவண்ணாமலை : பாழடைந்த கிணற்றில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டனர்.திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(24). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு வள்ளிவாகை கிராமத்தில் உள்ள முருகர் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, காரில் வீடு திரும்பினார்.
அப்போது, வள்ளிவாகை அடுத்த வன்னிநகர் பகுதியில் சாலையோர திருப்பத்தில் கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாழடைந்த கிணற்றில் தலைக்குப்புற விழுந்தது. காருக்குள் சிக்கியபடி கிணற்றுக்குள் விழுந்த கோபால், அலறி கூச்சலிட்டார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், கிராம மக்கள் திரண்டு வந்து கயிறு கட்டி கோபாலை மீட்டனர்.
அதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கோபால், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.