திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்: 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்: இன்றிரவு கிரிவலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அண்ணாமலையாருக்கு இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் அன்னாபிஷேக அலங்காரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதையொட்டி கோயிலில் 3 மணி நேரத்திற்கு தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது.
அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்களில் பிரசித்தி பெற்ற ஒன்று அன்னாபிஷேகம். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் அஸ்வினி நட்சத்திரத்தின்போது அண்ணாமலையாருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி இன்றிரவு 9.45 மணிக்கு தொடங்கி நாளை இரவு 7.27 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அன்னாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. சுவாமிக்கு அன்னத்தாலும், உண்ணாமுலையம்மனுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களாலும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சுவாமிக்கு அன்னம் சாத்தும்போது பக்தர்கள் தரிசனம் செய்வது மரபு கிடையாது என்பதால் 3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படும்.
அன்னாபிஷேகத்தில் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்றும், நாளையும் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ராஜகோபுரம் வழியாக ஒற்றை வழி வரிசை நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். பவுர்ணமி என்பதால் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, சிறப்பு பஸ் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
சிறப்பு பஸ், ரயில்
பக்தர்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும், சென்னையில் இருந்து காட்பாடி வழியாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று வேலூரில் இருந்து 50 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என்று மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.