திருவள்ளூரில் சோகம்.. வண்டை உயிருடன் விழுங்கிய குழந்தை: உள்ளே சென்று மூச்சுக்குழாயை கடித்ததால் உயிரிழப்பு!!
திருவள்ளூர்: திருவள்ளூர் தாமரைப்பக்கத்தில் வண்டை பிடித்து உயிருடன் விழுங்கிய குழந்தை உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சக்தி நகரில், ஒரு வயது குழந்தை மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வயது குழந்தையான குகஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கீழே கிடந்த வண்டை எடுத்து விழுங்கியதாக தெரிகிறது. குழந்தை விழுங்கிய வண்டு, அதன் மூச்சுக்குழாயை கடித்துள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதைக் கவனித்த பெற்றோர் பதறியடித்துக்கொண்டு குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி இறந்துவிட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை உயிரிழப்பு தொடர்பாக உள்ளூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சம்பவங்கள், குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.