திருப்பூரில் மேலும் ஒரு வரதட்சணைக் கொடுமை : திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
திருப்பூர் : திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.பிரீத்திக்கு கடந்தாண்டு செப்டம்பர் 15 ம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கணவர் குடும்பத்திற்கு 120 சவரன், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் பிரீத்தியை கொடுமைப்படுத்தியதாகி கூறப்படுகிறது. வரதட்சணை கொடுமையால் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாயார் வீட்டில் இருந்துள்ளார் பிரீத்தி. கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த பிரீத்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் பிரீத்தியின் உறவினர்கள் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி தந்ததை அடுத்து பெண்ணின் உடலை உறவினர்கள் பெற்றனர்.