திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சை பூங்கா
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடுத்த பரிணாமமாக குழந்தைகளுக்காக சிகிச்சை பூங்கா (sensory park) அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2022ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாகவும், நூற்றுகணக்கானோர் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சளி, காய்ச்சல், இருமல் போண்றவை மட்டுமல்லாது, தடுப்பூசி செலுத்துதல், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக இங்கு தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் (Early Intervention Services) மூலம் பிறந்ததிலிருந்து 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, அவர்களது வளர்ச்சியில் காணப்படும் தாமதங்கள் அல்லது ஊனங்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை மற்றும் ஆதரவை வழங்குவதாகும்.
இதன்மூலம், குழந்தைகளின் வளர்ச்சிதிறன் மேம்படுத்தப்படுத்தப்படுகிறது. இந்த சேவையின் ஒரு பகுதியாகவே திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்களுக்கான சிகிச்சை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, வேலூர், திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை வளாகங்களில் இது போன்ற பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காக்கள் ஆட்டிசம் மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அவர்களின் பார்வை, ஒளி, தொடு உணர்வு, சுவை ஆகிய ஐம்புலன்களின் உணர்ச்சியை சிகிச்சை போல் இல்லாமல் விளையாட்டு வடிவில் தூண்ட உதவுகிறது.
பூங்காக்கள் எல்லாவற்றிலும் இருப்பதுபோல ஊஞ்சல், சறுக்குமரம், சீசா பலகை போன்ற விளையாட்டுச் சாதனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், குழந்தைகளின் தசைகளை மேம்படுத்த சில சாதனங்களும், கயிறுகளை பிடித்து தொங்குவதற்கு ஒரு சாதனம், பிடித்துக்கொண்டு நடக்கவும், ஏறுவதற்கும் கம்பிகள் போன்ற சிகிச்சை சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கால் மூட்டு சரியாக இயங்காத குழந்தைகளுக்கு நடக்கும் பாதை தனியாக என குறைபாடுள்ள குழந்தைகள் ஆர்வத்தின் காரணமாக தங்களை தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்படவுள்ளன. இவை உணர்ச்சி தூண்டல் பூங்கா எனவும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணியானது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மையங்களுக்கு செல்வதை காட்டிலும் இதன் மூலம் பயன்பெற முடியும்.குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இந்த பூங்காவின் மூலம் விளையாட்டு வடிவில் சிகிச்சை அளிக்கப்படும்போது அவர்கள் விரைவில் குணமடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.