திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்ய நாளை ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் வெளியீடு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வரும் டிசம்பர் 30ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக ஜனவரி 8ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய 3 நாட்களுக்கு அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அறங்காவலர் குழுவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க ஆன்லைனில் நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை பதிவு செய்யும் பக்தர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி ஆன்லைனில் எலக்ட்ரானிக் குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, டிசம்பர் 2ம் தேதி டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த 3 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த 3 நாட்கள் நேரடியாக இலவச தரிசனம் மற்றும் வேறு எந்த டிக்கெட்டுகளும் இருக்காது. ஜனவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களையும், வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வரும் டிசம்பர் 5ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தினமும் ஆயிரம் டிக்கெட்டுகள் என டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த டிக்கெட்களை பெறும் பக்தர்களுக்கு ஜெயபேரை ஜெயபேரி துவார பாலகர்கள் சன்னதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த டிக்கெட்கள் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதால், திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த டிக்கெட்டுகள் முற்றிலும் இந்த நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களும், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3.26 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,677 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,732 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.26 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 23 அறைகளில் தங்கியுள்ள பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர்.