திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கு வருபவர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தானம், விஜிலென்ஸ், மாவட்ட போலீசார் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூடுதல் செயல் அதிகாரி வெங்கையாசவுத்ரி, எஸ்பி சுப்பராயுடு, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா மற்றும் போலீசார் தேவஸ்தானம், ஆர்டிசி அதிகாரிகள் பங்கேற்றனர். இதுகுறித்து நிருபர்களிடம் வெங்கையாசவுத்ரி கூறியதாவது: வரும் 24ம்தேதி முதல் அக்டோபர் 2ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வருவதற்காக 435 ஆர்டிசி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருட சேவையன்று 1லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அன்று பஸ்களை கூடுதல் முறை இயக்க ஏற்பாடு செய்யப்படும்.திருமலையில் அமைக்கப்பட உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் நிரம்பிய பிறகு திருப்பதியில் 23 பகுதிகளில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆர்.டி.சி பஸ்களை திருமலைக்கு இயக்கப்படும். மாடவீதிகளில் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பக்தர்கள் வரை அமரலாம்.
ரூ.4.13 ேகாடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 65,066 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,620 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.13 ேகாடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை 31 அறைகளில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகே தரிசிப்பார்கள். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
5 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கருவறையில் மூலவர் மீது பட்டு துணி போர்த்தப்பட்டு, கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. பின்னர் பச்சை கற்பூரம், கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், திருச்சூர்ணம், பன்னீர் உள்ளிட்ட மூலிகை கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 11 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.