திருப்பதி அருகே இன்று காலை வாகன ஓட்டியை தாக்க முயன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது: மேலும் 2 சிறுத்தைகள் நடமாட்டம்?
திருமலை: திருப்பதி அருகே வாகன ஓட்டிகளை தாக்க முயன்ற சிறுத்தை இன்று காலை கூண்டில் சிக்கியது. ஆந்திர மாநிலம் திருப்பதி அலிபிரியிலிருந்து செர்லோபள்ளி செல்லும் சாலையொட்டிய வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது சிறுத்தை வெளியேறி சாலைக்கு வந்து விடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் இந்த சாலையையொட்டி வேத பல்கலைக்கழகம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், கண் மருத்துவமனை, அறிவியல் பூங்கா மற்றும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் வெளியே வர வேண்டாம் எனவும், அலிபிரி-செர்லோபள்ளி சாலையில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, அலிபிரி சாலையில் பைக்கில் சென்ற ஒருவர் மீது பாய்ந்து தாக்க முயன்றது. இதையடுத்து வனத்துறையினர் 3 இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் வைத்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள பகுதியில் சிறுத்தைக்காக வைக்கப்பட்ட கூண்டில் இன்று காலை சிறுத்தை பிடிபட்டது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு திருப்பதி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். கடந்த சில மாதங்களாக பொதுமக்களை மற்றும் மாணவர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் அந்தப்பகுதியில் மேலும் 2 சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களை வைத்து கண்காணிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.