திருப்பதி மலைப்பாதையில் அரசு பஸ்சின் அச்சு முறிந்து விபத்து: தடுப்பு சுவரில் கார் மோதியது
திருமலை: திருமலையில் இருந்து 25 பக்தர்களுடன் அரசு பஸ் நேற்று மாலை திருப்பதிக்கு புறப்பட்டது. 57வது திருப்பத்தை அடைந்தபோது, பஸ்சின் முன்சக்கரத்தின் அச்சு உடைந்தது. இதனால் டயர் தனியாக கழலும் நிலை ஏற்பட்டதால் பஸ் தடுமாறி சாலையை விட்டு விலகி சிறிது தூரம் சென்று நின்றது. பேருந்தின் வேகம் குறைவாக இருந்ததாலும், டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மலைப்பாதை சாலை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
பஸ்சில் இருந்த பயணிகள் வேறொரு பஸ்சில் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் சென்னையைச்சேர்ந்த பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை தரிசனம் செய்துவிட்டு காரில் ஊருக்கு புறப்பட்டனர். முதலாவது மலைப்பாதை சாலையில் சென்றபோது, 34வது திருப்பத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதியது. மேலும் அவ்வழியாக வந்த அரசுபஸ்சின் மீது மோதி நின்றது. இதில் காரில் இருந்த ஏர் பலூன்கள் திறந்து கொண்டதால் பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.