திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி தரிசனத்திற்கான டிக்கெட் வெளியிடும் தேதிகள் அறிவிப்பு: ஆன்லைனில் பதிவு செய்யலாம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பல்வேறு தரிசனம் மற்றும் அறை முன்பதிவு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதில் ஜனவரி மாதம் அங்கபிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் அக்டோபர் 19ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதற்கான டோக்கன்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு வரை பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அக்டோபர் 21 முதல் 23ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதே சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல் இந்த டிக்கெட் மூலம் மூலவர் தரிசனம் செய்வதற்கான விர்சூவல் சேவைக்கு வரும் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி ரூ.500 வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற 24ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் பெற 25ம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் மற்றும் அறைகள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.