திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்டில் ரூ.123 கோடி உண்டியல் காணிக்கை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.123.43 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதற்கேற்றவாறு உண்டியல் காணிக்கையும் அதிகளவு உயர்ந்து வருகிறது. தினமும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த காணிக்கை தினமும் கணக்கிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரியாக தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 23 லட்சத்து 15 ஆயிரத்து 330 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.
உண்டியலில் ரூ.123.43 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 8 லட்சத்து 94 ஆயிரத்து 843 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 19ம் தேதி, அதிகபட்சமாக உண்டியலில் ரூ.5 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 700 காணிக்கையாக கிடைத்தது. அன்று 76,033 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ஆகஸ்ட் 27ம்தேதி, மிகக்குறைந்த தொகையான ₹.3.06 கோடி உண்டியலில் காணிக்கையாக இருந்தது. அன்று 77,185 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 16ம்தேதி அதிகபட்சமாக 87,759 பக்தர்களும், 28ம்தேதி குறைந்தபட்சமாக 63,843 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.
காத்திருப்பு அறை அடைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 82 ஆயிரத்து 118 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 118 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ேகாயில் உண்டியலில் ரூ.3.97 கோடி காணிக்கை கிடைத்தது. ேநற்று இரவு சந்திர கிரகணம் என்பதால் நேற்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் மூடப்பட்டது. ஏற்கனவே காத்திருக்கும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்தபிறகு இன்று அதிகாலை 2 மணியளவில் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் திறக்கப்பட்டு பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் இன்று காலை முதல் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.