திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருமலை: புரட்டாசி 3ம் சனிக்கிழமையான இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை தொடர்ந்து திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவ நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் திருமலையில் நேற்று 73,581 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 28,976 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.2.60 கோடி காணிக்கை செலுத்தினர். புரட்டாசி மாதம் 3ம் சனிக்கிழமையான இன்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளதால், பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோகர்ப்பம் அணை வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.