3 கிலோ மீட்டருக்கு மேல் நீண்ட வரிசை திருப்பதியில் 48 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: ரூ.3.53 கோடி உண்டியல் காணிக்கை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சுதந்திர தினம், ஆடிக்கிருத்திகை மற்றும் வார விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. மேலும், ஆழ்வார் தோட்ட பூங்கா, நாராயணகிரி பூங்கா வரிசைகள் அனைத்தும் நிரம்பி ஆக்டோபஸ் கமாண்டோ அலுவலகம் வரை சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நேற்று காத்திருந்தனர்.
இதனால் இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரமும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரமும் காத்திருக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் போதிய அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்கள் மற்றும் மாட வீதிகள், மடங்களில் தங்கி உள்ளனர்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், திருமலையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அன்னப்பிரசாத சிறப்பு கவுண்டர்களிலும் தொடர்ந்து பக்தர்களுக்கு பால், அன்ன பிரசாதம், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 77 ஆயிரத்து 43 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.3.53 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். 41,859 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.