திருப்பதியில் 3ம் நாள் பிரமோற்சவம் சிம்ம வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமி: திரளான பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிரவு முதல் சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன்தினம் காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி குருவாயூர் கிருஷ்ணர் அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். இரவு அன்னவாகன உற்சவத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இந்நிலையில் 3ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி மாடவீதியில் பவனி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த உற்சவம் விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்குகளுக்குரிய தீய எண்ணங்களை நீக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக நடைபெறுகிறது. சுவாமி வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின், டப்பு மேளம், கோலாட்டம், பரத நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றிரவு முத்துப்பந்தல் வாகன உற்சவம் நடைபெற்றது.