திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம் தங்கதேரில் மலையப்பசுவாமி பவனி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வசந்த உற்சவத்தின் 2ம் நாளான இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணியளவில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்கதேரில் எழுந்தருளி, மாடவீதிகளில் பவனி வந்தார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமியை வணங்கினர். மேலும் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
இதையடுத்து மதியம் வசந்த மண்டபத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் முழுவதும் மனம் கமழும் வண்ண மலர்கள் மற்றும் பலவித பழங்கள், மூலிகை வேர்களை கொண்டு செயற்கை வனம் அமைக்கப்பட்டது. பச்சை மரங்கள், மலர்களுடன் புலி சிறுத்தை, குரங்குகள், நரிகள், பாம்புகள், மயில்கள், வாத்துகள், பறவைகள் ஆகிய பொம்மைகளும் இடம்பெற்றிருந்தது. இது பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது.
3வது நாளான நாளை தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், சீதா லக்ஷ்மண சமேத கோதண்டராம சுவாமி. ஆஞ்சநேயர், ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.