திருப்பதியில் நிலுவையில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
*ஸ்மார்ட் சிட்டி தலைவர் உத்தரவு
திருமலை : திருப்பதி ஸ்மார்ட் சிட்டி இயக்குநர்கள் குழுவின் 40வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி தலைவரும், கலெக்டருமான வெங்கடேஸ்வர், திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணைய துணை தலைவர் சுபம் பன்சால் ஆகியோர் ஆன்லைனில் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல் ஸ்மார்ட் சிட்டி எம்.டி. மற்றும் மாநகராட்சி ஆணையர் என். மவுரியா தனது அலுவலகத்தில் காணொலி மூலம் பங்கேற்றார்.
கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திட்டங்களின் முன்னேற்றத்தை விரைவாகக் கண்காணிக்க வேண்டும் . 6 மெகா வாட் சூரிய சக்தி திட்டத்தை ஆய்வு செய்து, அதை பிபிபி (பொது, தனியார் பங்களிப்பு) முறையில் நிர்வகிக்க டெண்டர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திட்டம் உட்பட தற்போது செயல்பாட்டில் உள்ள திட்ட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் ஸ்மார்ட் சிட்டி இயக்குநர்கள் ராமச்சந்திர ரெட்டி, ராம, பொறியியல் அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் பங்கேற்றனர்.